இயேசுவின் உவமைகள்: கிறிஸ்தவம் காட்டும் பாதை – Astrology In Tamil

இயேசுவின் உவமைகள்: கிறிஸ்தவம் காட்டும் பாதை

இந்த செய்தியைப் பகிர்க

மண்ணுலகு சார்ந்தவற்றை மட்டுமே நாடாமல் விண்ணுலகு சார்ந்தவற்றையும் நாட இறை அருளை வேண்டி ‘‘வானகத்திலுள்ள எங்கள் தந்தாய் உமது அரசு வருக’’ என மன்றாடுவோம்.

இயேசு இறையாட்சி பணியைத் தொடங்கியபோது விண்ணரசின் மாட்சியைப்பற்றி பறைசாற்றத் தொடங்கினார். அக்கால யூத சமுதாயத்தில் செல்வாக்குடன் செயல்பட்டுக் கொண்டிருந்த வெளி வேடக்காரர்களான மறைநூல் அறிஞரும், பரிசேயரும் தங்கள் சுயநலம் தழுவிய போதனைகளால் அப்பாவி மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தனர். அந்த எளிய மக்களை இறையாட்சிக்குள் கொண்டுவர அவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் இயேசு விண்ணரசு பற்றிய பல உவமைகளை எடுத்துக் கூறினார். ஒரு உவமையில் இறைவன் விதை விதைப்பவராக உருவகப்படுத்தப்படுகிறார். பலதரப்பட்ட மக்கள் மனதில் இறை வார்த்தை விதைக்கப்படுகிறது.

பாதையோரத்தில், பாறை நிலத்தில், முட்செடிகள் நடுவில் விழுந்த விதைகள் பலன் தராமல் போவதுபோல் தடுமாறும் மனம் கொண்ட மக்கள் இறை வார்த்தைகளை கேட்டும் பயனற்று போகின்றனர். விண்ணரசை சார்ந்தவர் நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு சமமானவர்கள். இவர்கள் இறை வார்த்தைக்கு செவிமடுத்து அதை செயலாற்றுபவர்; அதனாலேயே இறை அரசுக்குள் வந்துவிடுபவர். இப்படித்தான் விண்ணரசு விரிவடைகிறது. கடவுளைத்தவிர உலகில் மற்றவை மனதை ஆதிக்கம் செலுத்துமேயானால் விண்ணரசுக்குள் நுழைய இயலாது. இன்னொரு உவமையில் கோதுமை பயிரிடப்பட்டது. இரவில் பகைவன் வந்து களைகளை விதைத்துவிட்டான்.

கூலியாட்கள் வந்து நிலக்கிழாரிடம் தெரிவித்தபோது அவர் அறுவடை காலம் வரை களைகளை வளர விட்டு அறுவடை காலத்தில் அவற்றைக் கட்டாக கட்டி நெருப்பில் போடலாம் என்றார். இறையாட்சியில் நல்லவர்களோடு தீயவரும் இருப்பர். நன்மையும், தீமையும் இணைந்தே இருக்கும். பொறுமையுடன் கடவுள் தீமைகளை சகித்துக் கொள்கிறார். ஆனால், இறுதி காலத்தில் தீமை அழியும் நன்மை வெல்லும் என்பதை இயேசு எடுத்துக் கூறுகிறார். விண்ணரசுக்கு ஒப்பிட்டுக்கூறிய மற்றுமொரு உவமையில் கடுகு விதை மிகச் சிறியதாயினும் முளைத்தபின் மற்ற செடிகளைவிட பெரிதாகும் என்றார். இறையாட்சி படிப்படியாக விரிந்து பரந்து அனைத்துலக மக்களையும் அரவணைத்துக் கொள்ளும் என்பதையே இது குறிக்கின்றது.

நிலத்தில் மறைந்திருந்த புதையலை கண்டவரும் விலை உயர்ந்த முத்தைக் கண்ட வணிகரும் தங்களுக்கு உள்ளதையெல்லாம் விற்று நிலத்தையும் முத்தையும் வாங்கிக்கொண்டதாக கூறப்படும் உவமையில் புதையலும், முத்தும் விண்ணரசுக்கு ஒப்பாகும் என்கிறார். நாம் பெறும் நல்ல வாய்ப்புகளை, இறை அனுபவங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நம்மிலும் பிறரிலும் இறையாட்சி வளர நாம் காரணமாக இருப்போம். மனம் மாறுங்கள் விண்ணரசு நெருங்கி விட்டது என்னும் இயேசுவின் குரலுக்கு செவிமடுப்போம். மண்ணுலகு சார்ந்தவற்றை மட்டுமே நாடாமல் விண்ணுலகு சார்ந்தவற்றையும் நாட இறை அருளை வேண்டி ‘‘வானகத்திலுள்ள எங்கள் தந்தாய் உமது அரசு வருக’’ என மன்றாடுவோம்.

  • கூட்டப்புளி சல்வதோர் விக்டர்


Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply