தோஷத்தை போக்கும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் – Astrology In Tamil

தோஷத்தை போக்கும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம்

இந்த செய்தியைப் பகிர்க

சென்னையில் உள்ள சக்தி தலங்களில் மிக மிக பழமையான தலமாக திகழ்வது பிராட்வே கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாகும்.

சென்னையில் உள்ள சக்தி தலங்களில் மிக மிக பழமையான தலமாக திகழ்வது பிராட்வே கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாகும். கொத்தவாசல் சாவடியில் காய்கறி மார்க்கெட் இருந்தபோது கடைகளுக்கு மத்தியில் இந்த ஆலயம் இருந்தது போன்ற தோற்றம் இருந்தது.

காய்கறி மார்க்கெட் கோயம்பேடுக்கு இடம் பெயர்ந்த பிறகு இந்த ஆலயத்துக்கு சென்று வருவது மிக மிக எளிதாக மாறி உள்ளது. பார்வதிதேவியின் ஒரு அம்சமாக கன்னிகாபரமேஸ்வரி இந்த ஆலயத்தில் சாந்தரூபமாக அருள்பாலித்து வருகிறாள்.

ஆலயம் சிறியதாக இருந்தாலும் அதன் மகிமை மிகவும் மகத்துவமானது. இந்த ஆலயத்தின் பின்னணியில் மிகப்பெரிய வரலாறு உள்ளது. அதை தெரிந்து கொண்டு கன்னிகா பரமேஸ்வரியை வழிபட்டால் அவளது பரிபூரண அருளை நாம் பெற முடியும். ஒருசமயம் சிவபெருமான் வைசியர் அனைவரையும் பூவுலகம் சென்று தங்கள் கடமைகளைச் செய்யுமாறும் தான் நகரேஸ்வர ஸ்வாமியாகவும் அம்பிகை விந்தியவாசினியாகவும் தோன்றி அவர்களை என்றும் காத்திருப்போம் என்று கூறினார்.

ஆனால் வைசியர்கள் இறைவனை நீங்க மனமின்றி பிரம்ம லோகம் சென்று பிரம்மனைத் துதித்தனர். பிரம்மதேவன் அவர்களிடம், தானே பூவுலகில் பாஸ்கராச்சாரியராகப் பிறந்து அவர்களின் குருவாக இருந்து வழி நடத்துவேன் என்று ஆறுதல் கூறினார். பின்னர் வைகுந்தவாசனை தரிசனம் செய்ய அவரும் அவர்களிடம் உலக நன்மைக்காக பூவுலகிற்குச் செல்லுங்களென்றும், தானே ஜனார்த்தன ஸ்வாமியாகவும், திருமகள் கோனக மலையாகவும் வந்து அவர்களை காப்பதாகவும் வாக்களித்தார்.

வைசியர்கள், மும்மூர்த்திகளின் ஆசிகளுடனும், அவர்களால் அளிக்கப்பட்ட நவநிதிகளையும் பெற்றுக் கொண்டு நீங்க மனமில்லாமல் கைலாயத்தை விட்டு பூமிக்கு வந்தனர்.வைசியரான சமாதி மகரிஷி, பெனுகொண்டா நகர மன்னன் குசுமசெட்டியாகப் பிறந்து குசுமாம்பாள் என்ற பெண்ணை மணந்து இறைநினைவுடன் வாழ்ந்து வந்தார். வெகுகாலமாக அவர்களுக்குக் குழந்தைபாக்கியம் இல்லாததால் குலகுருவின் ஆசியுடன் புத்திரகாமேஷ்டியாகம் புரிய, வசந்தருதுவில், வைகாசி, சுக்கிரவாரம், தசமி, புனர்வசு கூடிய நன்னாளில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் பிறந்தன.

தெய்வாம்சம் பொருந்திய பெண் குழந்தை ஒரு கையில் கிளியையும், மற்றொரு கையில் வீணையையும், மேலிரு கரங்களில் தாமரையையும், பாசத்தையும் தாங்கி நாற்கரங்களோடு, பேரழகுடன் பெற்றோருக்குக் காட்சி தந்து பின் சாதாரண குழந்தையாக மாறினாள். அவர்களின் குலகுரு பாஸ்கராச்சாரியார் அந்த பெண் குழந்தைக்கு வாசவி என்று பெயரிட்டு ஆசீர்வதித்தார்.

இதற்கிடையில் விஷ்ணுவர்த்தன் என்ற சாளுக்கிய மன்னன் ராஜமகேந்திரபுரத்தை ஆண்டுவந்தான். அவன் தன்னைச் சுற்றியுள்ள பலநாடுகளையும் வெல்லும் நோக்குடன் படையெடுத்துச் சென்றான். அவ்வாறு செல்கையில் பெனுகொண்டாவில் வாசவியைக் கண்டு அவளை மணக்க விரும்பினான். குசுமசெட்டியிடம் சென்று பெண் கேட்டான்.

குசுமசெட்டி தன் குலத்தாருடன் ஆலோசனை நடத்தினார். 18 நகரங்களிலிருந்து 714 கோத்திரக்காரர்கள் நகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வைசிய மகா சபையில் ஒன்று கூடி விவாதித்தனர். 612 கோத்திரக்காரர்கள் பெண் கொடுக்கலாம் என்றனர். 102 கோத்திரக்காரர்கள் கொடுக்க வேண்டாம் என்றனர். மேலும் அவர்கள் தங்கள் குலதர்மத்தைக் காக்க தீக்குளிக்கவும் துணிந்தனர். அதனால் கோபமடைந்த 612 கோத்திரக்காரர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து நாட்டை விட்டு வெளியேறினர்.

விஷ்ணுவர்த்தன், வாசவியைச் சிறைபிடிக்க சேவகர்களை விரைந்து அனுப்பினான். வாசவி, தன்னால் வந்த குழப்பத்தைத் தீர்க்கவும் விஷ்ணுவர்த்தனிடம் அகப்படாமல் இருக்கவும் தான் அக்னிப்பிரவேசம் செய்வதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள். அவளுடன் 102 கோத்திரக்காரர்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் விட்டுவிட்டு தம் மனைவியருடன் அக்னிப் பிரவேசம் செய்து கயிலையை அடைந்தனர். வாசவி பரமேஸ்வரரோடு ஒன்று கலந்தாள். அன்று முதல் வாசவி, கன்னிகா பரமேஸ்வரியாக எல்லோருக்கும் அருள்பாலித்து வருகிறாள்.

வாசவியாக வாழ்ந்த ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியை ஆரிய வைசியர்கள் தங்கள் குலதெய்வமாக ஏற்று, ஆண்டுதோறும் அம்பிகையின் அவதார நன்னாளையும், அக்னிப் பிரவேசத்தையும் அதிவிமரிசையாக தங்கள் ஆலயங்களில் கொண்டாடி வருகின்றனர். சென்னை பிராட்வேயில் உள்ள கொத்தவால்சாவடி ஆதியப்பா தெருவும், கோடவுன் தெருவும் சந்திக்கும் இடத்தில் வாசவி தேவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் அம்பிகை இரு திருக்கரங்களுடன் வலது திருக்கரத்தில் பூவை ஏந்திக்கொண்டு கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த அன்னையை உற்று நோக்கினால், மதுரை மீனாட்சி அம்மனே நம் முன் நிற்பது போல் தத்ரூபமாக இருக்கிறது.

வாசவி அம்மனின் கடைக்கண் பார்வையில் நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. எனவே இத்தல அம்மனை வழிபட்டு, கருவறை தீபத்தில் தொடர்ந்து 9 வாரங்கள் நெய் சேர்த்து வந்தால் சரக கிரக தோஷங்களும் அகலும் என்பது ஐதீகம். கருவறையின் இடதுபுறம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியின் உற்சவ விக்ரகம் அமைந்துள்ளது. ‘கன்னிகா பரமேஸ்வரியின் சரிதத்தைப் படிப்பவர்களும், காதார கேட்பவர்களும் இவ்வுலகில் சகல செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவர்’ என்கிறது கந்தபுராணம்.

வாசவி அம்மனுக்கு ஊறவைத்த பச்சைப் பருப்பை வேகவிட்டு, கையால் மசித்து, உப்பு காரமிட்டு நைவேத்தியம் செய்கிறார்கள். வாசவியின் அக்னிப் பிரவேச நாள் அன்று, அன்னையை முழு நெற்றுத் தேங்காயில் ஆவாஹனம் செய்து ஹோம குண்டத்தில் இடுகிறார்கள். அன்னையை இறக்கிய பின் கருவறையில் உள்ள அம்மனை மூட்டை, மூட்டையாக மலர்களைக் கொண்டு நிறைத்து கதவை மூடி விடுவார்கள். அன்று மாலையில் கதவைத் திறந்து புஷ்பங்களை அகற்றி, உஷ்ணத்தில் இருக்கும் அம்பாளுக்கு 1000 லிட்டர் பசும்பால் அபிஷேகம் செய்து குளிர வைப்பார்கள். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவச அலங்காரம் செய்வார்கள்.

வசந்த உத்ஸவம் உட்பட பல்வேறு உத்ஸவங்கள் இத்திருக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அபிஷேக அலங்காரங்களும் நடைபெறுகின்றன. இத்திருக்கோயிலை “ஸ்ரீ கன்யாபரமேஸ்வரி தேவஸ்தானம்‘ என்ற தர்ம ஸ்தாபனம் மிகச் சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறது. ஆலயத்தை தொடர்புகொள்ள 25383598, 25362262 என்ற எண்களில் அழைக்கலாம்.

அடி மேல் அடி வைத்தால் அன்னையின் அருள் கிடைக்கும்

கன்னிகாபரமேஸ்வரி ஆலயத்தில் உடலை வருத்தும் அளவுக்கு மிகப் பெரிய கடுமையான வேண்டுதல்கள், வழிபாடுகள் எதையும் செய்ய வேண்டியது இல்லை. கன்னிகா பரமேஸ்வரி வீற்றிருக்கும் பிரகாரத்தை அடி மேல் அடி எடுத்து வைத்து நடந்து வந்து வேண்டி கொண்டாலே போதும். அன்னையின் அருளை முழுமையாக பெற முடியும். அப்படி அடி மேல் அடி எடுத்து வலம் வரும்போது உள்ளம் உருக வேண்டி கொண்டால் அன்னையின் அருளை உடனே பெறலாம்.

இன்று அன்னக்கூட உற்சவம்

கன்னிகாபரமேஸ்வரி ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகளவு பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக ஆடி மாதத்தில் பெண்கள் அதிகளவு வந்து வழிபாடு செய்து செல்வார்கள். ஆடி மாதம் முழுவதுமே இந்த ஆலயத்தில் மிக சிறப்பான பூஜைகள் நடைபெறும்.

குறிப்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆடி அன்னக்கூட மகாஉற்சவம் நடைபெறும். நாளை காலை 9 மணிக்கு கன்னிகாபரமேஸ்வரி மகளிர் கல்லூரியில் இருந்து 102 பெண்கள் பால் குடம் எடுத்து வருவார்கள். 10.20 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். 11.30 மணிக்கு அலங்காரம் அன்னக்கூட மகா உற்சவம் நடத்தப்படும்.
102 கிலோ அரிசியை சமைத்து சாதத்தை குவித்து அன்னக்கூட மகாஉற்சவம் நடத்தப்படும்.

இந்த சாதம் கன்னிகாபரமேஸ்வரிக்கு நைவேத்தியம் செய்யப்படும். மதியம் 12 மணிக்கு தீபாராதனை நடைபெறும். 12.15 மணி முதல் அன்னக்கூட பிரசாதம் பிரிக்கப் பட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும். நாளை மாலை 6 மணிக்கு சவுகார்பேட்டை ஸ்ரீவாசவி கிளப் சார்பில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்தப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply