நன்மை தரும் வாழ்வு – Astrology In Tamil

நன்மை தரும் வாழ்வு

இந்த செய்தியைப் பகிர்க

ஒரு மனப்பட்டு நற்குணம் பெற்றவர்களுடன் இறைபணியில் ஈடுபட்டு இந்த சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். ஒருவராக பல நேரங்களில் நற்பணிகளை முடித்துவிட முடியாது.

டெலிவிஷனில் ஒளிபரப்பான கிரிக்கெட் ஆட்டத்தை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் மகன் என்னிடம் வந்து விடைத்தாளை நீட்டி “அப்பா கையெழுத்து போடுங்க” என்றான்.

அந்த விடைத்தாளை வாங்கி சற்று புரட்டிப் பார்த்தேன், நல்ல மதிப்பெண்கள் தான் பெற்றிருந்தான். இருந்தாலும் “ஏன்… இவ்வளவு மார்க் தான் வாங்க முடியுமா?. நல்லா படிச்சா தான் நல்ல வாழ்க்கை அமையும். நான் படிக்கும் போது மரத்தடியில் இருந்து படித்தேன், மழையானாலும் மூன்று கிலோமீட்டர் நடந்தே செல்வோம்” என்று என்னுடைய பழைய புராணத்தை ஆரம்பித்தேன்.

‘அப்பா நல்ல மார்க் தானே, கையெழுத்து போடுங்க ப்ளஸ்’ என்றான்.

அறிவுரையை நான் நிறுத்தவில்லை. ‘நன்றாக படித்தால் தான் நல்ல சம்பளம் கிடைக்கும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு போய் வேலை செய்ய முடியம், நாலு பேரு மதிப்பாங்க…’ என்று அடுக்கிக்கொண்டே போனேன்.

மகனின் முகம் சுருங்கியது. சட்டென தன்னுடைய அறைக்குப் போய்விட்டான்.

மனதுக்குள், ‘நல்ல வாழ்க்கை என்றால் என்ன?’ என்பதை சிந்திக்க ஆரம்பித்தேன்.

சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் பணம், பொருள், அழகு, பதவி, சொத்து, கார், வீடு, நிலம், செல்வாக்கு என அனைத்தும் அதிகமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். அதுவும் குறிப்பாக மற்றவர்களிடம் இருப்பதைவிட அதிகமாக நம்மிடம் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

நல்ல வாழ்க்கை என்பது, ‘நாம் நன்மை நிறைந்தவர்களாக காணப்படவும் செயல்படவும் வேண்டும்’ என்பதை வேதம் கற்றுத்தருகிறது. நல்ல வாழ்க்கை என்பது கடவுள் நம் மேல் வைத்த திட்டத்தை செயல்படுத்துவது எனலாம்.

‘ஏனெனில், நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற் செயல்கள் புரிவதெற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்’ (எபேசியர் 2:10).

நமது நற்குணம் என்பது கடவுள் கொடுத்த கொடை. அவர் கற்றுக்கொடுத்த பாடம். இயல்பிலே நாம் பாவ சுபாவம் உள்ளவர்கள். ஒரு சில பாவங்களை விட்டு வெளியே வர முயற்சி செய்தும் தோல்வியே மிஞ்சும். ஆனால் கடவுளின் உதவியுடன் நம்மை ஆட்கொண்ட பாவத்திலிருந்து விடுதலை பெற்று நல்ல வாழ்க்கை வாழ நம்மால் முடியும்.

உலக செல்வங்கள் இருந்தாலும் ஒரு சில பாவங்களின் காரணமாக வாழ்க்கையில் தோற்றுப்போன பலரின் வாழ்க்கையை நாம் பார்த்திருக்கிறோம். ஆதலால் கடவுள் கொடுத்த நற்குணத்தை பேணிக்காக்க வேண்டும். நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமெனில் நல்ல சிந்தனை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

‘உண்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனதில் இருத்துங்கள்’ (பிலிப்பியர் 4:8) என்று வேதம் கூறுகிறது.

நேர்மையாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் பார்க்கும் தீமையான செயல்களை கண்டு அமைதியாக இருத்தல் கூடாது.

‘நீங்கள் ரோமில் இருக்கும்போது ரோமனைப்போல் இருங்கள்’ என்ற பழமொழி எல்லா நேரமும் பொருந்தாது. ஒரு வேளை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தீமையான செயல்களில் ஈடுபடும் போது அதற்கு துணை போகக்கூடாது. அதை நீங்கள் கடிந்து கொண்டே ஆக வேண்டும்.

நல்லவற்றை செய்வதால் தீமை உண்டானால் கவலைப்படாதிருங்கள். ஏனென்றால் நீங்கள் தவறு செய்யவில்லை. ஒரு இலக்கை நோக்கிச் செல்ல பலவழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி. சொல்லப்போனால் அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்.

கடவுள் மேல் நம்பிக்கை வைத்து நற்குணம் படைத்தவர்களிடம் ஐக்கியப்படுங்கள். அது இந்த பாவ உலகத்தில் நல்ல வாழ்க்கை வாழ நமக்கு உதவும்.

ஒரு மனப்பட்டு நற்குணம் பெற்றவர்களுடன் இறைபணியில் ஈடுபட்டு இந்த சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். ஒருவராக பல நேரங்களில் நற்பணிகளை முடித்துவிட முடியாது. ஆதலால் நாம் குழுவாக இயங்கும் பொழுது அது மற்றவர்களுக்கும் ஒரு ஊக்கத்தை கொடுக்கும்.

உலகமே போற்றும் அன்னை தெரசா மற்றவர்களுக்காக வாழ்ந்து பல விருதுகளை பெற்றார். அவற்றில் வந்த பணத்தை எல்லாம் வறுமை வயிறுகளுக்குப் பசியாற்றினார். ‘வரவேற்பு அறைகளில் அழகாக தோன்றும் பதக்கங்களை விட வறுமை வயிறுகளின் பசி போக்கும் உணவே உயரியது’ என்று எண்ணினார்.

உலகின் உயரிய விருதான நோபல் பரிசு அளிக்கப்பட்ட போது உலகமே ஆனந்தித்து. அன்னையோ, ‘மலர்களுக்காய் செலவழிப்பதை என் மழலைகளுக்காய் செலவழியுங்கள்’ என்று சொன்னார்.

இப்படி மற்றவர்களுக்காக வாழும் வாழ்வல்லவா உலகம் போற்றும் நல்ல வாழ்வு.

துலீப் தாமஸ், சென்னை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply