தும்பிக்கையானுக்கு விரதம் இருந்தால் மனம் மகிழும் வாழ்க்கை அமையும் – Astrology In Tamil

தும்பிக்கையானுக்கு விரதம் இருந்தால் மனம் மகிழும் வாழ்க்கை அமையும்

இந்த செய்தியைப் பகிர்க

ஆவணி மாதம் வரும் சதுர்த்தியை நாம் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடுகிறோம். அன்றைய தினம் பக்தியோடு தும்பிக்கையான் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையால் இன்பங்கள் இல்லம் தேடிவரும்.

ஐங்கரன் என்றும், தும்பிக்கையான் என்றும், வேழமுகத்தான் என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுபவர் விநாயகப்பெருமான். இவருக்கு சதுர்த்தி திதி உகந்ததாகும். அதில் ஆவணி மாதம் வரும் சதுர்த்தியை நாம் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடுகிறோம். அன்றைய தினம் பக்தியோடு கணபதி கவசம் பாடி வழிபட்டால், வாழ்வில் நல்ல திருப்புமுனை ஏற்படும். தும்பிக்கையான் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையால் இன்பங்கள் இல்லம் தேடிவரும்.

“வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும், வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ வெற்றி மிகுத்து வரும்” என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஞாலம் போற்றும் வேழமுகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று, அருகில் இருக்கும் சிவாலயம் சென்று அங்குள்ள கணபதிக்கு அருகம்புல் மாலையிட்டு வழிபட்டால், அவர் பெருகும் பொன்னை அள்ளி, பெருமையுடன் நமக்கு அளிப்பார்.

எந்தவொரு காரியத்தையும் தொடங்கும் பொழுது, முதன் முதலில் விநாயகரை வணங்கி விட்டுத் தொடங்குவதுதான் வழக்கம். எழுதத் தொடங்கும் பொழுதுகூட நல்ல பலன்கள் நமக்குக் கிடைக்க, பிள்ளையார் சுழி போட்டு தொடங்குகிறோம். கணங்களுக்கெல்லாம் அதிபதியாக இருப்பதால்தான் அவரை நாம் ‘கணபதி’ என்கின்றோம்.

இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி திருநாள், ஆவணி மாதம் 16-ம் நாள் (2.9.2019) திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால், எல்லாப் பாக்கியங்களும் நமக்குக் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. விநாயகர் சாணத்திலும் காட்சி கொடுப்பார்; சந்தனத்திலும் காட்சி கொடுப்பார். மஞ்சள் பொடியிலும் காட்சிதருவார்; மரகதக் கல்லிலும் காட்சிதருவார். விநாயகரை வழிபட நினைப்பவர்கள் வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்கிரகம் வைத்திருக்கும் ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம்.

‘சதுரம்’ என்றால் நான்கு பக்கங்களிலும் பூர்த்தியாகும் அமைப்பாகும். எனவே வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக இந்த சதுர்த்தி விரதத்தை நாம் மேற்கொள்ளலாம். விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்தது. அவருக்கு படைக்கும் ஒவ்வொரு பொருளிலும் அர்த்தம் இருக்கிறது. மோதகம் படைப்பதன் காரணம், மோதும் அகங்கள் இருக்கக் கூடாது என்பதால்தான். ‘எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்’ என்ற தத்துவத்தை வலியுறுத்தித்தான் மோதகத்தைப் படைக் கிறோம். ‘அகம்’ என்றால் ‘மனம்’ என்று பொருள்.

குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க மோதக நிவேதனம் செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறியோட, சிதறுகாய் உடைக்க வேண்டும். அவல், குசேலனை குபேரனாக்கிய பொருள். எனவே அவல், பொரி, கடலையை ஆனைமுகனுக்கு அர்ப்பணித்து, கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை அமையும். மக்கள் போற்றும் செல்வாக்கும் வந்துசேரும்.

ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டமத்துச் சனியின் பிடியில் சிக்கியவர்கள், சனிக்கிழமை அன்று விநாயகப்பெருமானை வழிபட வேண்டியது அவசியமாகும்.

கனவுகளை நனவாக்கும் கற்பகமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் வீற்றிருக்கிறார். அதன் அருகில் கீழச்சிவல்பட்டியில் சுகம் தரும் சுந்தர விநாயகராகவும், பி.அழகாபுரியில் கலங்காதகண்ட விநாயகராகவும், காரைக்குடி அருகில் உள்ள கோட்டையூரில் சொற்கேட்ட விநாயகராகவும் காட்சி தருகிறார். அவருக்கு அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல் படைத்து வழிபட வேண்டும்.

‘தும்பிக்கை கொண்டவனே! தூதாகச் சென்றவனே! நம்பிக்கை கொண்டு நானுன்னைத் தொழுகின்றேன்! அப்புவியில் எனக்கு வரும் அன்றாடப் பிரச்சினையை, இன்பமுடன் தீர்த்துவைக்க எழுந்துவா கற்பகமே!’ என்று பாடுங்கள். பலன் கிடைக்கும்.

ஒருவரது ஜாதகத்தில் கேதுவின் ஆதிக்க திசை, புத்தி நடக்கும்போது, விநாயகரை வழிபட்டால் தடைகள் நீங்கும். தக்கவிதத்தில் வாழ்க்கை அமையும். தடுமாற்றங்கள் அகலும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றன. விக்னங்களை அகற்றுவதால் ‘விக்னேஸ்வரன்’ எனப் பெயர் பெற்றவர் விநாயகப் பெருமான்.

வள்ளியை முருகப்பெருமான் மணம் முடிப்பதற்காக, யானை வடிவில் வந்து விநாயகர் உதவியதாக புராணங்கள் சொல்கின்றன. எனவே யானைக்கு கரும்பு, வாழைப் பழம் போன்ற உணவுப் பொருட்களை வழங்கி, அதன் ஆசியைப் பெறுவதும் நல்லது. ஆனைமுகப்பெருமானை ஆவணி சதுர்த்தியில் வழிபட்டால் ஆவல்கள் பூர்த்தியாகும். அனுதினமும் செல்வம் வரும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: selvi

Leave a Reply